Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 நாட்கள் இரவு நேரங்களில் நடந்த அதிரடி சோதனையில் போதையில் வாகனம் ஓட்டிய 434 பேர் மீது வழக்குப்பதிவு: பைக் ரேசில் ஈடுபட்டதாக 130 பேர் சிக்கினர்

சென்னை, ஜூன் 16: சென்னையில் விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 3 நாட்கள் இரவு நேரங்களில் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 434 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பைக் ரேசில் ஈடுபட்டதாக 130 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் கடந்த 12ம் ேததி முதல் 14ம் ேததி வரையிலான 3 நாட்கள் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தனர்.

குறிப்பாக, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை என 120 இடங்களில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுப்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் உட்பட 350 பேர் அதிரடி வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்களை அடையானம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை முழுவதும் 3 நாட்களில் இரவு நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 434 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்தனர். அதேபோல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டியதாக 130 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,385 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.