Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கடையில் பானிபூரி சாப்பிட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மாநகராட்சி ஊழியர் கைது

சென்னை: கடையில் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கடை ஒன்றில் கடந்த 9ம் தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த முகமது ரிஸ்வான் (29) என்பவர், தனது மனைவியுடன் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த ஒருவர், தனது செல்போனில் முகமது ரிஸ்வான் மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அவர், உடனே செல்போனை பறித்து பார்த்த போது, பானிபூரி சாப்பிட்ட பெண்களை பல கோணங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து இருந்ததும், தனது மனைவியையும் ஆபாசமாக எடுத்து இருந்ததும் தெரியவந்தது.

உடனே முகமது ரிஸ்வான் மனைவி, அவரை கண்டித்துள்ளார். அப்போது அந்த நபர், முகமது ரிஸ்வான் மனைவியை கீழே தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த முகமது ரிஸ்வான், ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் 2வது தெருவை ேசர்ந்த பசுபதி (44) என்றும், இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், பசுபதி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.