வேளச்சேரி, ஆக.10: வேளச்சேரியில் தனியாக வசித்து வந்த முன்னாள் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தா சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி, டி.என்.எச்.பி காலனியை சேர்ந்தவர் கோதண்டபாணி (73). இவர் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். இவரது மனைவி கடந்த 2020ம் ஆண்டு இறந்து விட்டார். மனைவி இறந்ததில் இருந்து அதே வீட்டில் தனியாக வசித்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, கோதண்டபாணி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஒரு மகள் கடைசியாக 2ம் தேதி போன் செய்து பேசியுள்ள நிலையில் திடீர் மரணம் அடைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் எப்படி இறந்தார் என தெரியவரும்.



