Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரேபிடோ டிரைவர் குத்திக்கொலை

தண்டையார்பேட்டை, ஜூலை 8: சென்ட்ரல் அருகே காதலியை பார்த்துவிட்டு பைக்கில் வந்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையை சேர்ந்தவர் வசந்தகுமார் (21) ரேபிடோ பைக் ஓட்டும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் மீது மோதினார். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தகுமாரின் கழுத்தில் குத்தினர்.

தடுக்க முயன்றபோது கையில் வெட்டி விட்டு தப்பினர். இதில், வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வசந்தகுமாரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வசந்தகுமார் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பூக்கடை காவல் நிலைய போலீசார் வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பூக்கடை உதவி ஆணையர் வீரக்குமார் உத்தரவின்பேரில் பூக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், வசந்தகுமார் சேப்பாக்கத்தில் உள்ள தனது காதலியை பார்த்துவிட்டு இரவு 11.30 மணி அளவில் வீட்டிற்கு சென்ட்ரல் வழியாக வால்டாக்ஸ் சாலையில் வரும்போது மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

வசந்தகுமார் தனது காதலியை பார்த்துவிட்டு வரும்போது கொலை செய்யப்பட்டாரா, என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வசந்தகுமார் வீட்டின் அருகே உள்ள கல்லறை சாலையில் அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. மேலும், அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து போலீசார் மாற்று வழியில் வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, இறந்த நபரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், ‘பைக் டாக்சி ஓட்டி சென்ற நபர் எப்படி கொலை செய்யப்பட்டார், யார் இந்த கொளையை செய்தது என்று இதுவரையும் சரியாக விசாரிக்கப்படாமலும், ஒருவரை கூட கைது செய்யவில்லை. எங்களிடம் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறினர். விரைந்து கொலையாளிகளை கைது செய்யவில்லை என்றால் இறந்தவரின் உடலை வாங்க போவதில்லை, என்றனர்.