Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் கட்டணம் உயர்கிறது: உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை, மே 6: வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. வணிக சிலிண்​டர்​கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்தில் கடும் தேக்கம் நிலவி வருகிறது. வணிக சமையல் காஸ் கிடைக்​காத​தால், பல உணவகங்கள் 2 மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டன. சில உணவகங்களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்​பு என எரிபொருள் சிக்கன நடவடிக்கையில் இறங்கின. பல உணவகங்களில் விறகு அடுப்​பு​களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.

மேலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவங்களும் கோவையில் நடந்தன. இந்த நிலையில் தற்போது அபரிமிதமான விலையேற்றம் தொழில் துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. சிறிய தேநீர் கடை தொடங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலரும் பல மடங்கு விலை கொடுத்து வணிக சிலிண்டரை வெளிச்சந்தையில் பெற்று தொழில் செய்து வந்தனர்.

உணவகங்களிலும் சிலிண்டர் விலை உயர்வை காரணம் காட்டி பொருட்களின் விலை உயர்த்தப்பட்டன. இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், ஒன்றிய அரசு 19 கிலோ வணிக சிலிண்டர் விலையை 993 ரூபாய் உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 81% வரை விலை உயர்ந்திருப்பது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே தொழில் பாதிப்பை சந்திக்க தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அதிரடியான விலையேற்றத்தின் காரணமாக ரூ.7000 வரை வெளிச்சந்தையில் விற்கப்படும் சிலிண்டர்கள் இனி, ரூ.10,000 வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒன்றிய அரசின் விலையேற்றம் என்பதும், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்க வழிவகுக்கிறது. பலரும் தொழில் செய்ய முடியாமல் தொழில் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலையேற்றம், தொழில் துறையின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையை அனைத்து மட்டத்திலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையின் திடீர் உயர்வு, தமிழ்நாட்டில் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதி துறைக்கு பெரிய சுமையாக மாறியுள்ளது. வணிக சிலிண்டர் விலை அதிகரிப்பால் சேவைச் செலவுகள் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் பொதுமக்களின் தினசரி செலவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையில் வணிக சிலிண்டர் மற்றும் அதன் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக விடுதிகளில் கட்டணம் உயர்த்த போவதாக தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.

புதிய கட்டண விவரங்களின்படி, 4 பேர் தங்கும் ஏசி இல்லாத அறைகள் ₹6,500 முதல், ஏசி அறைகள் ₹7,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 3 பேர் தங்கும் அறைகளுக்கு ஏசி இல்லாதது ₹7,000 மற்றும் ஏசி வசதி ₹8,000 வரை இருக்கும். 2 பேர் தங்கும் அறைகளில், ஏசி இல்லாதது ₹8,000 மற்றும் ஏசி வசதி ₹9,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இவை குறைந்தபட்ச கட்டணமாக மட்டுமே இருக்கும். விடுதிகளின் வசதிகளை பொறுத்து விலை மாறுபடும். அதிகரித்து வரும் செலவுகளால், சில இடங்களில் மர அடுப்புகளையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் நீடித்தால், சிறிய தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் செலவும் மேலும் உயரும் அபாயம் உள்ளதாக உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து விடுதி உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளன. இதனால் உணவுகள், தங்கும் விடுதி கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து, சாமானிய மக்கள் மீது கடுமையான பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீர் விலை உயர்வால் கடைகளை மூட வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் ரூ.6000, ரூ.7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடித்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம். விறகுகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, விடுதிகளின் கட்டண உர்வை அறிவித்துள்ளோம்.

குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும். அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து உங்களுக்கு சேவை செய்ய வழி செய்யுமாறு வேண்டுகிறோம்,’’ என்றனர்.