Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேடவாக்கம் நன்னீர் குளத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை

வேளச்சேரி, நவ.5: வேளச்சேரி அருகே நன்னீர் குளத்தில் தூர்வாரும் போது செயல் இழந்த பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளச்சேரி அடுத்த மேடவாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் நன்னீர் குளம் உள்ளது. இங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணி கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ்(45) என்பவர் குளத்தில் இறங்கி பார்வையிட்டு, மேலே ஏறும்போது வழியில் உடைந்த மதுபாட்டில்கள் கிடந்துள்ளது. அந்த பாட்டில்களை அகற்ற முற்பட்டபோது அதன் அருகில் துப்பாக்கி தோட்டா போல ஏதோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் மேடவாக்கம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்து அவை செயல் இழந்த பழைய துப்பாக்கி தோட்டாக்கள் என்பதை உறுதிபடுத்தினர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது, கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்தவர்கள் யாராவது குளத்தில் கொண்டு வந்து வீசினார்களா, என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இதே குளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 800 ஆண்டுகள் பழமையான கிராமிய எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு ஒன்று கண்டெடுத்து தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.