மீனம்பாக்கம், நவ.5: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குருவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, கோலாலம்பூர் வழியாக, சென்னைக்கு நேற்று அதிகாலை தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார்.
அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை வெளியில் விடாமல், சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். அப்போது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இடையே உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 கோடி.
தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் வாலிபரை கைது செய்து விசாரித்தனர். அதில், பட்டதாரி இளைஞரான இவர் வேலை கிடைக்காததால், போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பயணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், ஆசை வார்த்தை கூறி இளைஞரை கஞ்சா கடத்தலில் ஈடுபடுத்திய கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.


