Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இருசக்கர வாகனங்களுக்கு தவெகவினர் ஸ்டிக்கர் ஒட்டியதாக வீடியோ வெளியிட்ட பெண் மீது வழக்குப் பதிவு

பல்லாவரம், நவ.4: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதி திமுக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளரும், வழக்கறிஞருமான சவுமியா என்பவர், தனது முகநூல் பக்கத்தில் தவெக அமைச்சர் ஒருவர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக நிதி ஒதுக்கி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வாகனங்கள் சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறையாக பதிவு செய்து வழங்கப்பட்டதாகவும், பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதனை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிகாரிகளே அந்த வாகனங்களை பயனாளிகளுக்கு கொடுத்து விட்டனர்.

ஆனால், தற்போது அமைச்சர் ஒருவர், பயனாளிகள் அனைவரையும் மீண்டும் வரவழைத்து, அவர்களிடம் ஏற்கனவே கொடுத்திருந்த வாகனங்களை வாங்கி, அதில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முதலமைச்சர் படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டி, மீண்டும் கொடுக்கப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி, இது ஸ்டிக்கர் ஆட்சி, நீங்கள் புதிதாக வழங்குங்கள், இப்படி ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள் என வீடியோவில் பேசியிருந்தார். சவுமியாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பல்லாவரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவர், அவதூறு பரப்பும் சவுமியா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பல்லாவரம் போலீசார், சவுமியா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.