Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாதவரம், வடபெரும்பாக்கம் பகுதியில் இரவில் 8 மணி நேரம் மின்தடை : தூக்கமின்றி தவித்த மக்கள்

மாதவரம், ஆக.4: மாதவரம், வடபெரும்பாக்கம் பகுதிகளில் 8 மணி நேரம் மின்தடை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  சென்னை மாதவரம் தொகுதி, மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட வடபெரும்பாக்கம் அருகே கன்னியம்மன் சாலை, புழல் யூனியன் சாலை மற்றும் பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சில தினங்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள், நோயாளிகள் ஆகியோர் இரவில் புழுக்கம் காரணமாக, தூங்க முடியாமல் வெளியே வந்து, வீட்டு வாசலில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர, இந்த பகுதியில் உள்ள மின் பெட்டிகள் பழுதடைந்தும், உடைந்தும் திறந்து கிடக்கிறது. இதில் உள்ள இணைப்புகள் எல்லாம் ஆபத்தான நிலையில் தொங்குவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின் பெட்டிகளை சரி செய்யவேண்டும் என்று இப்பகுதி மக்கள், வடபெரும்பாக்கம் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேற்கண்ட பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து அறிந்ததும் மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று மின்தடையை சரி செய்யவேண்டும் என்று மின்வாரிய உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலை மின்வாரிய ஊழியர்கள், மின் பெட்டியில் உள்ள வயரை சரிசெய்து மின் விநியோகம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்களது பகுதியில் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால் போனை எடுப்பதில்லை. நேரில் சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். அதிகப்படியான மின் கட்டணம் செலுத்தியும் சீரான மின்சாரம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். வடபெரும்பாக்கம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுத்து, பொதுமக்களில் புகார்களுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.