Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்

பூந்தமல்லி, ஜூன் 4: பூந்தமல்லியில் உள்ள மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் கடந்த மே மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, முதல் நாள் திருவிழாவில் சுவாமி தங்க முலாம் கேடய அலங்காரத்திலும், இரண்டாம் நாள் காலை சேஷ வாகனத்திலும், 3ம் நாளான மே 30ம் தேதி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து 4ம் நாள் சூரிய பிரபை, 5ம் நாள் மேனா பல்லக்கு எனப்படும் மோகினி அவதாரம், 6ம் நாள் தங்க முலாம் கேடய அலங்காரத்தில் காட்சி அளித்தார். இந்நிலையில், 7ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. பூந்தமல்லி எம்எல்ஏ குட்டி(எ) பிரகாசம், அறநிலையத்துறை இணை ஆணையர்(திருவள்ளூர்) அனிதா, கோயில் செயல் அலுவலர் சிந்துமதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிறைவாக கோயில் நிலையை வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி மேனா பல்லக்கு எனப்படும் வெண்ணெய் தாழி, 9ம் நாளன்று மேலா பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி உற்சவம், 10ம் நாளான ஜூன் 6ம் தேதி சப்தாவர்ண உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இரவில் சிம்ம வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என விதமான வாகனத்தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

முன்னதாக புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. தினமும் காலை, மாலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.சிந்துமதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.