முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் பலி : உறவினர்கள் சரமாரி குற்றச்சாட்டு
பெரம்பூர், நவ.3: கொடுங்கையூர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாதவரம் பால் பண்ணை மூலச்சத்திரம் வசந்தம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குமார். கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு யுவராஜ், லோகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். இதில், 2வது மகன் லோகேஷ், பி.காம் வரை படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீபிகா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் மது போதைக்கு அடிமையானார்.
இதையடுத்து, குடும்பத்தினர் லோகேஷை, கடந்த 29ம் தேதி மூலக்கடை ஏபிஆர் அரசு தெரு பகுதியில் உள்ள பாத்திமா நர்சிங் ஹோம் மற்றும் பாத்திமா மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் லோகேஷுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், லோகேஷுக்கு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே லோகேஷன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனை கவனித்த தந்தை குமார், செவிலியர்களை அழைத்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.
அப்போது, மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர்கள் ஆம்புலன்சை வரவழைத்து லோகேஷை மாதவாரத்தில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தபோது லோகேஷ் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனே மருத்துவமனை செவிலியர்கள், நாங்கள் மருத்துவ துறையில் பணிபுரிந்து வருகிறோம். லோகேஷ் இன்னும் உயிரோடுதான் உள்ளார், என்று கூறி ஆம்புலன்ஸில் அவரை அழைத்து செல்ல வற்புறுத்தினர். இதனைத் தொடர்ந்து லோகேஷ் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்த மருத்துவர்கள் லோகேஷை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, லோகேஷின் உடல் மீண்டும் பாத்திமா நர்சிங் ஹோம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை அறிந்த லோக்கேஷின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் எஸ்ஐ உமாபதி மற்றும் போலீசார் லோகேஷின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர். தொடர்ந்து, உயிரிழந்த லோக்கேஷின உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையின் முடிவில் லோகேஷின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும், என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பாத்திமா நர்சிங் ஹோம் மருத்துவர் பதூர் மொய்தீன் என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நர்சிங் ஹோம் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் அமைத்து கொடுங்கையூர் பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தள்ளது. இதற்கு போதிய ஆவணங்கள் உள்ளதா? முறைப்படி பதிவு செய்யப்பட்டு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறதா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து உயிரிழந்த லோகேஷின் உறவினர்கள் கூறுகையில், ‘நாங்கள் லோகேஷை இங்கு அட்மிஷன் போடும்போது ரூ.25 ஆயிரம் வாங்கினர்.
அதற்கு ஒரு பில் கூட தரவில்லை. மேலும், கடந்த 2 நாட்களாக டாக்டர் வராமல் அவர் செவிலியர்களை தொடர்பு கொண்டு போன் மூலம் என்ன ஊசி போட வேண்டும் என்ற தகவல்களை கூறி வந்தார். மருத்துவமனையில் அவசர நிலைக்கு கூட மருத்துவர்கள் இல்லை. பயிற்சி பெறும் செவிலியர்களை வைத்து இவர்கள் நர்சிங் ஹோம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி மேலும் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


