Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆட்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பு; மாநகர பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 3: ஆட்கள் பாற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பதாக கூறி, மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பணிமனையிலிருந்து அதிகளவில் ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌.

இதன் காரணமாக பேருந்துகளை இயக்குவதற்கு நடத்துநர், ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் மற்றவருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டாய விடுப்பு வழங்குவது மட்டுமல்லாமல் அந்நாளுக்கான ஊதியத்தையும் பிடித்தம் செய்வதால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி நேற்று காலை பணிக்கு வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேருந்துகளை இயக்காமல் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும், ஆளும்கட்சிக்கு என தனியாக தொழிற்சங்கம் இல்லாததால் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு முறையாக கொண்டு செல்ல முடியவில்லை என்றும், இதனால் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இனிமேல் இது போல் நடக்காதபடி பார்த்துக் கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் ஐயப்பன்தாங்கல்பணிமனையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதனால் அதிகாலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு செல்லவிருந்த பயணிகள் பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் கட்டாய விடுப்பு, சம்பளம் பிடிப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பாதது, பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். அதிகாலை நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.