Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4.80 கோடி கஞ்சா பறிமுதல்: இளம்பெண் கைது

சென்னை, நவ. 2: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது சென்னையைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், மலேசியா நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு மறுநாளே, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்து இருந்தார். அந்த பெண் பயணியை நிறுத்தி, சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பெண் சுங்க அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து பெண் பயணியை சுங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடைமைகளை பரிசோதித்தனர். உடைமைகளில் டிரை புரூட் பார்சல்கள் இருந்தன. அவைகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த மற்ற பார்சல்களை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதனுள் உயர்ரக போதைப் பொருளான ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 4.80 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.80 கோடி. இதை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஏழ்மையான நிலையில் இருப்பவர். அதோடு அவர் விமானங்களில் ஏற்கனவே பயணம் செய்ததும் கிடையாது.

இதை பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பல் இந்த பெண் பயணியை, ஆசைவார்த்தை காட்டி, கடத்தல் குருவியாக மலேசிய நாட்டிற்கு, அவர்கள் செலவிலேயே விமானத்தில் அனுப்பி வைத்து, போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் பெண் பயணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பெண் பயணியை ஆசைவார்த்தை காட்டி, கடத்தல் குருவியாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.