Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வரிடம் கூறி உங்களது வேலையை காலி செய்வேன் என மிரட்டல் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல்: சரித்திர பதிவேடு ரவுடி கைது

பெரம்பூர், ஜூன் 2: புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புளியந்தோப்பு காந்தி நகர் 5வது தெருவில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடி நந்தகுமார் (26) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டிலிருந்த இருந்த பெண்கள், சோதனை செய்யக்கூடாது எனக்கூறி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். திடீரென நந்தகுமாரின் தாயார், முதல்வரிடம் உங்களைப் பற்றி கூறி உங்களது வேலையை காலி செய்து விடுவேன், என கூறி தனது செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று போலீசாரை மிரட்டினார். நந்தகுமார் வீட்டில் சோதனை செய்ததில் 10 கிராம் எடையுள்ள 29 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதை மருந்து செலுத்தும் 6 ஊசிகள் சிக்கியது.

அதனைத்தொடர்ந்து, போலீசார் நந்தகுமாரை கைது செய்து வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, வீட்டில் இருந்த பெண்கள் திடீரென்று போலீசாரை தாக்கினர். இதையடுத்து, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக எதிர்த்து தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, போலீசார் நந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நந்தகுமாரின் தாய் மீனா, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் முன்பு வந்து பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டு, எனது மகனை வெளியை விட வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்திய நந்தகுமாரின் தாய் மீனா, மனைவி லட்சுமி மற்றும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.