Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, ஜூலை 1: எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்திற்கு வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கண்காணித்தனர். அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் ஒருவர், எத்தியோப்பியா வழியாக, சுற்றுலா பயணி விசாவில் இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.

அவரது உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். ஆனால் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. தொடர்ந்து, பெண்ணை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவருடைய வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அவர் வயிற்றுக்குள் பெருமளவு கேப்சூல்கள் விழுங்கி வந்திருப்பது தெரிய வந்தது. மருத்துவ குழுவினர் உதவியுடன், கென்ய இளம்பெண் வயிற்றுக்குள் விழுங்கி வந்த கேப்சூல்களை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வாறு அந்த பெண் விழுங்கி வந்திருந்த சுமார் 70 கேப்சூல்கள் வெளியில் எடுக்கப்பட்டன. அந்த கேப்சூல்களை உடைத்துப் பார்த்தபோது, மிகவும் உயர்தரமான, கொக்கைன் போதைப்பொருள் கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சுமார் 850 கிராம் கொக்கைன் கேப்சூல்களை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் கென்ய நாட்டு பெண்ணை கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கென்யா நாட்டு இளம் பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. எனவே, இவர் சென்னையில் இந்த போதைப் பொருளை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், சென்னையில் எங்கு இருக்கிறார்கள் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருளை கேப்சூல்கள் வடிவில் வயிறுக்குள் விழுங்கி கடத்தி வந்த கென்யா இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.