திடீரென தீப்பற்றி எரிந்த கார்
செங்கல்பட்டு, நவ. 5: திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (31). இவர், கார் ஓட்டுனர். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் ‘மாருதி-800’ காரில் சென்றார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 10.30 மணி அளவில் செங்கல்பட்டு அருகில் பழவேலி ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், காரில் பெட்ரோல் வாசனை வரவே உடனே காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு அனைவரும் காரில் இருந்து இறங்கினர். இதனை தொடர்ந்து, திடீரென காரின் முன் பக்கம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக்கண்ட சக வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், கார் முழுதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.