திட்டக்குடி, ஜன. 24: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திட்டக்குடி நகராட்சி ஆணையர் முரளிதரன் தலைமையில், மேற்பார்வையாளர்கள் கோபிநாத், ரஜினிகாந்த், கார்த்திகேயன், கலைவாணன், மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பரப்புரையாளர்கள் கலாவதி, சிவநந்தினி, பெண்ணரசி, பரமேஸ்வரி, அருள்ஜோதி மற்றும் குழுவினர், திட்டக்குடி பஸ் நிலையம், கடைவீதி, மெயின் ரோடு பகுதிகளில் உள்ள டீ ஸ்டால், ஸ்வீட் ஸ்டால், மளிகை கடை, பெட்டி கடை உள்பட 50க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் உள்ளனவா என அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகளில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த வசூலிக்கப்பட்ட அபராத தொகை ₹15 ஆயிரம். மீண்டும் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால், அதிக அளவில் அபராதம் விதிப்பதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என திட்டக்குடி நகராட்சி ஆணையர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்தார்.


