தஞ்சை பெரிய கோயிலில ஆருத்ரா தரிசனத்தில் நெல்மணிகள் தூவி மக்கள் நேர்த்திக்கடன் அரோகரா அரோகரா என கோஷங்கள் எழுப்பி வழிபாடு
தஞ்சாவூர், ஜன.14: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, 4 ராஜ வீதிகளில் வீதியுலா வந்த நடராஜ பெருமானுக்கு நெல்மணிகளை தூவி, மழைவேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் உள்ளிட்ட சிவன்கோயில்களில் மார்கழிமாத திருவாதிரை நடசத்திரத்தன்று ஆருத்ரா தரிசன நிகழ்வு வெகுவிமர்சையாக நடந்தது. அதில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். நேற்று சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். இதையடுத்து மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என வேண்டி, சாமி மீது நெல்மணிகளை பக்தர்கள் தூவினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்து, நெல்மணிகளை எடுத்துச் சென்றனர்.