அரியலூர்,அக்.30: அரியலூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 18 பேரை சட்டப் பேரவை உறுப்பினர் தாமரை எஸ்.ராஜேந்திரன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அரியலூரை அடுத்த வாரணவாசி சமத்துவபுரம் அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் சென்ற அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களை சட்டமன்றத் உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் நேற்று நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் தரமான சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ஜோதிவேல், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியன், நகர செயலர் ஏ.பி.செந்தில் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


