அரியலூர், ஆக.28: மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகைப் புதுப்பிக்க நாளை சனிக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் e-KYC கீழ் கைரேகைப் புதுப்பிப்பதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி நமது மாவட்டத்தில் 95.79% நிறைவடைந்துள்ளது.
கைரேகையை வைத்து புதுப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 31,187 ஆக உள்ளது. எனவே e-KYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளும் e-KYC மேற்கொள்ள ஏதுவாக 29.08.2026 (நாளை) சனிக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, e-KYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மேற்கண்ட நாளில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்று ரேகை வைத்து e-KYC புதுப்பித்துக்கொள்ளுமாறும், மேலும், கைரேகை பதிவு செய்யாமல் பணிநிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைக்கு சென்று தங்கள் கைரேகையை வைத்து e-KYC புதுப்பித்துக்கொள்ளுமாறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.



