ஜெயங்கொண்டம், ஆக.26: அரியலூர் மாவட்டம் செந்துறையில் மதுரை மேலவளவு செல்வம் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொகுதி செயலாளர் அன்பானந்தம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு திரண்ட அக்கட்சியினர், சாலையில் அமர்ந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், செந்துறை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் செந்துறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



