Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மீன்பிடி தடை காலத்தில் சாலையோர தரைக்கடைகளில் களைகட்டி வரும் நன்னீர் மீன் வியாபாரம்

அரியலூர், மே 15: தற்போது தமிழகத்தில் கடல்களில் மீன் பிடி தடை காலம் உள்ளதால் நன்னீர் மீன் வியாபாரம் களைகட்டி வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலமானது ஏப்ரல் 15 மதல் தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக குளம் அதிகம் உள்ள கிராமங்களிலும் நன்னீர் மீன் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. கிராமங்களில் உள்ள குளம் குட்டை ஆகிய நன்னீர் பகுதிகளில் பிடிக்கபடுகின்ற மீன்கள் அனைத்தும் பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குளங்களில் வளர்க்கப்படும் கெளுத்தி, சிலேபி, கெண்டை ஆகிய மீன்கள், தற்போது அதிகளவில் பிடிக்கப்பட்டு, சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல ஒரு சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான கிணறுகளில் கிடக்கும் மீன்களும் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு மீன்பிடி தடைகாலத்தில், நன்னீர் வகை மீன்களான, விரால் , குறவை, கெண்டை, ரோக்கு உள்ளிட்ட பல வகை மீன்கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் மீன் வியாபாரிகளிடம் ரூ.100, 150 என பேரம் பேசி மீன்களை அள்ளிச்செல்கின்றனர்.

சிறு வகை மீன்கள் கூறு கட்டி விற்கப்படுகிறது. இந்த வகையான மீன்கள் ரூபாய் 50க்கு கூட கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இவ்வாறு நன்னீர் வகை மீன்கள் விற்பனை செய்யும் சாலையோர கடைகள் ஆங்காங்கே திடீர் என முளைக்கின்றன. இதனை கண்டு வாகன ஓட்டிகள், தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையோர கடைக்கு வந்து பேரம் பேசி வாங்கி செல்கின்றனர். பொதுவாக மீன் வியாபாரிகள் மீன்களை வெட்டி தர, கூடவே ஆள்களை நியமித்து உள்ளனர்.

அவர்களுக்கு வெட்டுக்கூலி ரூ.10 முதல் ரூ.25 வரை தந்தால், மீன்களை அங்கேயே சுத்தம் செய்து, துண்டு துண்டுகளாக வெட்டி தந்து விடுகின்றனர். இதனால் வீடுகளில் சென்று லேசாக மீன்களை அலசி சமைத்து விடலாம். இதனால் பொதுமக்களின் பெரும் சிரமம் தவிர்க்கப்படுவதால், இது மகிழ்ச்சியை தந்து வருகிறது. இவ்வாறு மீன் பிடி தடை காலத்தில் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில், நன்னீர் வியாபாரம் நடைபெறுவதால், பொதுமக்களுக்கு மீன் தட்டுப்பாடு என்பதே தெரியாத அளவில் உள்ளது.