Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீரசோழபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை அகற்றிட அதிகாரிகள் உத்தரவாதம்

ஜெயங்கொண்டம், மே 15: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சருக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் கோவில் அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் விவசாயிகள் மது பிரியர்களால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும், நீதிமன்றத்தை அணுகியும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்ற அரசு முன்வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் தமிழக முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த அறிவிப்பில் பிரச்சனைக்குரிய வீரசோழபுரம் டாஸ்மாக் கடை கண்டிப்பாக மூடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் டாஸ்மாக் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில் ஏமாற்றம் அடைந்த வீர சோழபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரண்டு டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயங்கொண்டம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் தற்போது 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்திருந்தார். அதற்கு முதலில் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் வீரசோழபுரத்தில் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதி அருகில் இருக்கக்கூடிய பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.