அரியலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நேர்வுகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர், அக்.14: அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் சட்டம் ஒழுங்கு பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கலால் உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிகழ்வுகள், சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நேர்வுகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கனகமாணிக்கம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


