ஜெயங்கொண்டம், அக்.14: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவ காப்பீட்டுகளை அரசை ஏற்று நடத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பணி காலமாக மாற்ற வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார்.
முன்னதாக மனோகரன் வரவேற்று பேசினார். செவிலியர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழிய சங்க மாவட்ட தலைவர் மாவட்ட தலைவர் வேல்முருகன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மேலாளர் தாமோதரன் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.


