ஜெயங்கொண்டம், செப்.10: திருமானூர் ஒன்றியம் ஆண்டிபட்டாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல கூடிய பொதுமக்கள் பொதுப்பாதையை மீட்டுத்தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஆண்டிபட்டாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொது பாதையை சிலர் பட்டா மாற்றம் செய்து ஆக்கிரமித்ததால் சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லாமல் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு தங்களுக்கு பொதுப்பாதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் இளங்கோவனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஏசுதாஸ், திருமானூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, முன்னாள் செயலாளர் தங்கமலை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர்களோடு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சுடுகாட்டிற்கான பாதை, அதை தடுப்பவருடைய நிலம், அதில் இருக்கும் கரும்பு, சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாதை, சுடுகாட்டு கொட்டகை அனைத்தையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம் கட்சி நிர்வாகிகள் முறையிட்டு சுடுகாட்டிற்கான பொதுப்பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஒன்றுபட்ட கிராம மக்கள் உட்பட ஆயிரம் பேரை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
