Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் அரசு கலைக்கல்லூரி 59வது பட்டமளிப்பு விழா

அரியலூர், செப்.10: அரியலூர் மாவட்டம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் நடைபெற்ற அரசு கலைக் கல்லூரி (நிலை-1) 59வது பட்டமளிப்பு விழாவில் 785 மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை கலெக்டர் மிருணாளினி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: கல்லூரி படிப்பினை சிறப்பாக நிறைவு செய்து பட்டச் சான்றிதழ் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தை நோக்கி சிறப்பாக பயணிக்க கல்வியே இன்றியமையாததாகும். அரியலூர் மாவட்டத்தின் சிறப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அரியலூர் அரசு கலைக் கல்லூரி விளங்குகிறது. இக்கல்லூரியில் கல்வி பயின்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், தற்போது பல்வேறு பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி, கல்லூரிக்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து, தங்களது அறிவையும் திறமையையும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணமாக இருப்பவர்கள் அவர்களது பெற்றோர்கள். பெற்றோர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்கள் கல்வி கற்று, இன்று பட்டம் பெறும் உயர்வை அடைந்துள்ளனர். எனவே, பெற்றோர்களின் தியாகத்தை மாணவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளைகளாக திகழ்ந்து, அவர்களை பேணிக்காத்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இன்றையதினம் பட்டம் பெறும் அனைவரும் தங்களது கனவுகளை நனவாக்கி, நாட்டின் முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இளங்கலை தமிழ் பாடப்பிரிவில் பல்கலைக் கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பெற்ற மாணவி சிவசங்கரி மற்றும் பல்கலைக் கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதலில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன்படி 2025ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 550 மாணவ, மாணவிகளுக்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த 235 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 785 மாணவ, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) சேகர், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.