அரியலூர், செப்.10: அரியலூர்-ஜெயங்கொண்டம் முதன்மை சாலையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி முதல் வி.கைகாட்டி வரை கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நான்கு வழிச்சாலை தமிழக முதல்வர் நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வி.கைகாட்டி- முத்துவாஞ்சேரி சாலையின் மேற்கு புறத்தில் தனியார் சிமெண்ட் ஆலையும், பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கிழக்கு பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் மழை நீர் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிற்பது வழக்கம். இந்நிலையில் தற்போது வி.கைகாட்டி-முட்டுவாஞ்சேரி சாலையில் இருபுறமும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் அமைக்காமல் அவசரகதியாய் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கழிவு நீர் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைத்தால் மழைக்காலங்களில் பொதுமக்களின் குடியிருப்பில் மழை நீர் புகுந்து சேதம் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உடனடியாக வி.கைகாட்டி-முட்டுவாஞ்சேரி சாலையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் இருபுறமும் தனியார் சிமெண்ட் ஆலையின் நுழைவாயில் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

