அரியலூர்,அக்.9: அரியலூர் எல்.ஐ.சி கிளை அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், குறைக்கப்பட்ட முதலாம் ஆண்டு கமிஷனை மீண்டும் வழங்கிட வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். சூப்பர் சேல்ஸ் சாத்தி செயலி அணுகுதலை எளிமைப்படுத்திட வேண்டும்.
முகவர்களின் குழுக் காப்பீட்டிற்கான வயது வரம்பை நீக்கி முகவர்கள் பணியில் உள்ளவரை காப்பீடு வழங்கிட வேண்டும். பீமா தகம் எக்ஸ்சேஞ்ச் மற்றும் போர்டிபிலிட்டி திட்டத்தை செயல்படு வேண்டாம். பிரிமியம் பாயிண்டுகளில் ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் கிளைத் தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். கிளைச் செயலர் முருகானந்தம், நிர்வாகிகள் அன்பழகன், சவரிராஜ், ரவி, ராஜேந்திரன், மகாராணி, விஜயலட்சுமி, மாலதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் கோட்டத் தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


