அரியலூர், செப். 9: அரியலூர் மாவட்டம், மாண்ட் போர்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஹரிணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான ஐஎஸ்ஆர்ஓ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கேற்று, 456 மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் இருந்து இத்திட்டத்திற்கு மாண்ட்போர்ட் பள்ளி மாணவி ஹரிணி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் மே 11 முதல் 22-ந் தேதி வரை நடைபெற்ற ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சியில் ஹரிணி பங்கேற்று பயிற்சி பெற்றார். பயிற்சியை நிறைவு செய்த மாணவி ஹரிணி, பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அருட் சகோதரர் அந்தோணிசாமி வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினியை நேரில் சந்தித்து, இளம் விஞ்ஞானி திட்டத்தில் தான் வெற்றி பெற்ற சான்றிதழை காண்பித்து வாழ்த்துபெற்றார்.
அப்போது, மாணவியின் சாதனையை பாராட்டிய கலெக்டர் மிருணாளினி, தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ப்ளவர், பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

