Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடைகாலத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பம்

தா.பழூர்,மே 6: கோடை காலத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் மையம் விளக்கி உள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் விவசாயிகள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்ப வழிமுறைகள் வழங்கி உள்ளனர்.இதில் முன்னோர் அனுபவத்தின் அடிப்படையில் ‘சித்திரை மாதத்து உழவு பத்தரை மாதத் தங்கம்’ என்றனர். இதன் பொருள் சித்திரை மாதத்தில் உழவு செய்து விட்டால், அவ்வுழவின் மூலம் ஏற்படும் நன்மைகளால் அறுவடை மாதமான தை மாதத்தில் நல்ல மகசூல் பெறலாம் என்பதாகும்.

சித்திரை மாதத்து புழுதி உழவு பத்தரை மாற்றுத் தங்கம்’ என்கின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் மழை கோடை மழையாகும். கோடை காலத்தில் நிலத்தின் மேல் மட்ட மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்கு செல்லும் போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, கோடை காலங்களில் பெய்யும் மழை நீரானது, மழை நீர் பூமிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி, நிலத்தில் சேமிக்க கோடை உழவு மிகவும் அவசியமானதாகும்.

கோடை உழவு செய்யும் போது, உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால், மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் சிதைக்கப்படுகிறது. மேலும், காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால், மண்ணின் அங்ககச்சத்து அதிகரிக்கும். இந்த உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழை நீரானது, மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி, வீணாகிறது.

பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் கடினமானதாக இருக்கும்.உழவு செய்யும் போது, மண் இறுக்கம் குறைந்து, வளம் பெருகும். காற்றோட்டம் அதிகரித்து, நீர் ஊடுருவி நிலத்திற்குள் செல்கிறது.அறுவடை செய்யப்பட்ட அடித்தாள், வேர், மடக்கி உழப்படுவதால், சத்து அதிகரித்து, நன்மை செய்யும் உயிரினங்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது.

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில், கோடை உழவு செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதனால், நிலத்தடியிலுள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் இதர பூச்சிகளின் முட்டைகள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தின் காரணமாக அழிந்து விடும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது.புழுக்கள், அந்துப்பூச்சிகள் மற்றும் மூன்றாம் கட்ட படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது.

பயிர் சாகுபடி செய்யும் வயலைத் தரிசாக சுமார் 2 முதல் 3 மாதம் விடுவதனால் வயலில் உள்ள நூற்புழுக்கள், இரைச்செடியின்றி பயிரைத் தாக்கக் கூடிய விரியத்தினை இழக்கின்றன அல்லது இறக்கின்றன. இம்முறை மூலம் காய்கறிப் பயிர்களைத் தாக்கக்கூடிய வேர்முடிச்சு நூற்புழுக்களை வெகுவாகக் கட்டுப்படுத்தி பயன்பெறலாம் மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விவசாயிகள் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின்-9786379600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக்கொண்டு பயன்பெறலாம் என முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன், தெரிவித்துள்ளார்.