Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விவசாயிகளை ஏமாற்றியதாககூறி அல்வா கிண்டி நூதன போராட்டம்

அரியலூர், ஆக.5: அரியலூர் மாவட்டம், காமரசவல்லி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று அல்வா கிண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன், சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில்,குருவாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன், விவசாய சங்க நிர்வாகி சின்னத்துரை, உள்ளிட்ட விவசாயிகள் முன்னிலையில், பேருந்து நிறுத்ததில் தூத்தூர், குருவாடி, தேளூர், வைப்பூர், மாத்தூர் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து டிராக்டரில் ஊர்வலமாக முழக்கமிட்டவாறு காமரவல்லி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வரை சென்றனர். அங்கு, தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தமிழக அரசு விவசாயிகளுக்கு அல்வா கொடுத்துள்ளதாக கூறி, வளாகத்தில் அல்வா கிண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கூட்டுறவு சங்கச் செயலர் சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.