அரியலூர்,நவ.4: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் செயல்முறைத் திட்டத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்று வெற்றிப்பெற்ற வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் மூன்றாம் இடத்தில் வெற்றிப்பெற்று அடுத்த நிலைக்கு தேர்வாகியுள்ள அரியலூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்முறைத் திட்டத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து ரூ.1,00,000 பரிசுத்தொகை பெற்றுள்ளதைத் தொடர்ந்து வெற்றிப்பெற்ற பள்ளி மாணவிகள், மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தில் வெற்றிப்பெற்று அடுத்த நிலைக்கு தேர்வாகி உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், உள்ளிட்ட தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


