ஜெயங்கொண்டம்,அக்.28: வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெங்கு கொசு புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் பணிகள், முதிர் கொசு ஒழிப்பு பணியாக புகை மருந்து அடித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது மழைக்காலம் தொடங்கியதை அடுத்து கொசு உற்பத்தியும் அதிகரிக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி சார்பாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நகர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. நகர் பகுதியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பேருந்து நிலையம், ஜூப்ளி ரோடு, ராஜா கொல்லை தெரு, காந்திநகர், அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் முதிர் கொசு ஒழிப்பு பணியாக புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது மேலும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களை அதாவது தேவையற்ற பொருட்கள் வணிக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகள், கல்லூரி மற்றும் வீடுகளை சுற்றி உள்ள இடங்களில் இருந்தால் அகற்றிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் பணியினை ஜெயங்கொண்டம் நகராட்சி பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து நகராட்சி ஆணையர் சீனிவாசன் கூறுகையில், ஜெயங்கொண்டம் நகராட்சி பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் வீட்டினை சுற்றி உள்ள இடங்கள் மற்றும் வீட்டின் மொட்டை மாடிகளில் கிடக்கும் தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பூந்தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது எனவே தேவையற்ற பொருட்களை உடனடியாக பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர் வசம் ஒப்படைக்குமாறும், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு செய்ய வரும் பொழுது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும், நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராத விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


