Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறுவை பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூர், ஜூலை. 30: பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நல்லமுத்து கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப் படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் எல்நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 கரீப் பருவத்தில், வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் தேசிய பயிர்க்காப்பீட்டு இணைய தளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். கரீப் பருவ வெங்காய, பயிருக்கு காப்பீடு செய்வதற்கான வருகிற ஆக31ம் தேதி. வாழை, மரவள்ளி, மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு வருகிற செப்- 15 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு, நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு, நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் (https://pmfby.gov.in/) உள்ள ‘விவசாயிகள் கார்னர்’ வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை.

கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறு வட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியா பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப் படுகிறது. மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ, தோட்டக் கலை அலுவலரையோ உதவி தோட்டக்கலை அலுவலரையோ, வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பெரம்பலூர் வட்டாரத்தில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்ன பெரம்பலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நல்லமுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.