Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அரியலூர் அருகே சர்வீஸ் சாலையில் இருந்த மதகு குழாய்கள் திருட்டு: பொதுமக்கள் அதிர்ச்சி; போலீசில் புகார்

ஜெயங்கொண்டம், ஜூலை 30: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அண்மையில் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த காலகட்டத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாற்று வழியாக அமைக்கப்பட்டிருந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வந்தனர். அதேபோல், அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், தாங்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சர்வீஸ் சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த மதகுகள் வழியாக வெள்ளாற்றில் தண்ணீர் குடிக்கச் செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை சர்வீஸ் சாலையில் பொருத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கான்கிரீட் மதகுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் பெயர்த்தெடுக்கப்பட்டு மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதைக்கண்டு கோட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி மதகுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.