Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

உடையார்பாளையம் பகுதியில் குட்டையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூர், ஜூலை 28: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் குட்டையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கீழ முகமதியர் தெரு மற்றும் பள்ளிவாசல் தெரு ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் இடையே அரசுக்குச் சொந்தமான புறம்போக்குக் குட்டை ஒன்று உள்ளது. இக்குட்டைக்குத் தண்ணீர் வந்து செல்வதற்குத் தனியாக வரத்து மற்றும் வெளியேற்றப் பாதைகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இக்குட்டையை ஆக்கிரமித்து, கழிவுநீர் முழுவதையும் குட்டைக்குள்ளேயே விட்டு தேங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இக்குட்டை நிரம்பி, இதன் கழிவுநீர் அருகில் உள்ள சிவன் கோவில் தெப்பக்குளத்திற்குச் செல்லும் வகையில் உள்ளது. இதனால் தெப்பக்குளத்தின் புனித நீரும் அசுத்தமடையும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உடையார்பாளையம் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: குட்டைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கழிவுநீர் தனியாகச் செல்வதற்குக் தனியாக வாய்க்கால் வசதி அமைத்துத் தர வேண்டும். நீர்நிலையைச் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுகாதாரத் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நோய் தொற்று ஏதேனும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிந்து உரிய மருத்துவ முகாம்கள் மற்றும் சிகிச்சைகளை வழங்க வேண்டும். பொதுமக்களின் இக்கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.