Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதியில் வேட்டையாடுதல், மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வன அலுவலர் எச்சரிக்கை

பெரம்பலூர், ஜூலை 27: பெரம்பலூர் மாவட்ட வனப் பகுதிகளில் வேட்டையாடவோ, மது அருந்தவோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு இடங்களில் காப்புக்காடுகள் மற்றும் சமூக வனக்காடுகள் உள்ளன. பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைவது, மது அருந்துவது கூடாது. வனப்பகுதிக்குள் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது. தேன் எடுப்பற்காக தீப்பந்தம் தீ போன்றவற்றை வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்படுகிறது.

வனப்பகுதி மற்றும் வனப் பகுதியினை சுற்றியுள்ள தனியார் நிலங்களில் திரியும் மான்கள், மயில்கள், காட்டு முயல்கள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட வன உயிரினங்களை இறைச்சிக்காக வேட்டையாடுவதோ, முயல், பூனை, பறவைகளைப் பிடிப்பதற்காக வலை கட்டுவதோ, மயில்களுக்கு மருந்து வைப்பதோ போன்ற செல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. எச்சரிக்கைகளை மீறி வனக் குற்றங்கள் செய்பவர்கள் மீது, 1982 ஆம் ஆண்டு, தமிழ்நாடு வனச்சட்டம் படியும், 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படியும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட குற்றங்கள் புரிபவர்களை, வனப்பகுதி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வனப் பகுதிகளை சார்ந்துள்ள வயல்களின் உரிமையாளர்கள் சம்பந்தப் பட்ட வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனவர்களுக்கு, வனக்காப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.