Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூரில் வருகிற 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் ஜூலை 21: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் மிருணாளினி, கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் வருகின்ற 25.07.2026 சனிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பிரச்சார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு முகாமிற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள், பிரச்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும், முகாமினை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் 15,000-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பதிவுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான தகவல்களும், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான ஆலோசனைகளும், அரசுப் பணி போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளுக்கான மாணவர்கள் சேர்க்கைகான தகவல்களும், சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு RSETI மூலம் பயிற்சியும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழல் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்துகொள்ளலாம். எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமினை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கனக மாணிக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்ட தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.