குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் தெரிவிக்கும் நபரின் விபரம் பாதுகாக்கப்படும்: அரியலூர் கலெக்டர் உறுதி
அரியலூர், ஆக. 20: குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். தகவல் தெரிவிக்கும் நபரின் விபரம் பாதுகாக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணக்குடையான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மையம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் ‘விழித்திடு கண்மணி’ என்கிற ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்டம், வட்டாரம். கிராம அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு \”விழித்திடு கண்மணி\” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் நடக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் பெற்றோர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு குழந்தைத் திருமணத்தின் தீமைகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு மிக முக்கியமானது கல்வியாகும்.
ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வைக்கவேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். தகவல் தெரிவிக்கும் நபரின் விபரம் பாதுகாக்கப்படும். குழந்தைகள் பள்ளிக்கு இடைநிற்றல் இன்றி வருவதை தொடர்ந்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் கல்வி பயின்றுவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிலை பெறுவார்கள்.
இளம் வயதில் திருமணம் ஆன பெண்களுக்கு குறைவான ஊட்டச்சத்து மற்றும் எடை குறைவாக குழந்தைகள் பிறந்துள்ளதை காணமுடிகிறது. குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் ஒவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கும் நல்ல பண்புகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டும். எதிர்வரும் தலைமுறையினர் நல்லதொரு சமுதாயமாகவும், குழந்தை திருமணம் இல்லாத வகையிலும் உருவாக்கும் வகையிலும் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, செந்துறை வட்டாட்சியர் கோவிந்தராசு, பொதுமக்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



