அரியலூர், செப்.17: அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாதந்தோறும் சட்டம், ஒழுங்கு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டம், ஒழுங்கு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சாலை சீரமைத்தல், குடிநீர் வசதி, மின்விளக்கு சரிசெய்தல், ஏரி சீரமைத்தல், சீரான குடிநீர் வழங்குதல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், பேருந்து வசதி உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நேர்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கனக மாணிக்கம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
