அரியலூர் ஆக.14: அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை அரியலூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் அரியலூர் நகரின் பிரதான சாலைகளான பெரம்பலூர் சாலை, சின்னக்கடை தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தேங்கிய கழிவுநீரால் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், ஆங்காங்கே உடைந்த நிலையில் காணப்படும் குடிநீர் குழாய்களை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், கழிவுநீர் குடிநீருடன் கலந்து மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலத்தை முன்னிட்டு கால்வாய்களை முறையாக தூர்வாரி சுத்தம் செய்யாததும், அன்றாடம் தேங்கும் கழிவுகளை முறையாக அகற்றாததுமே சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்வதுடன், உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து, கழிவுநீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



