Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பேரளி ஊர்ப்புற நூலகத்திற்கு தனிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

பெரம்பலூர், மே 12: கட்டிடம் எங்களுடையது நீங்கள் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என அலுவலர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.மேலும், பேரளி ஊர்ப்புற நூலகத்திற்கு தனிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று நூலக உறுப்பினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (11ம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, பேரளி, வடக்குத்தெருவைச் சேர்ந்த ஊர்ப்புற நூலக உறுப்பினர் சி.இராகவன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகம் இயங்கி வருகிறது. ஊராட்சியின் ராஜீவ் கேந்திரா சேவைமையக் கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்தில் 16,144 புத்தகங்கள் உள்ளன. 1335 உறுப்பினர்களையும், 34 புரவலர்களையும் கொண்ட இந்த நூலகத்தை மாணவர்கள், இளையோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். போதிய இட வசதி இல்லாதது, கணிணி வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவும், நூலகத்திற்கென தனிக் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆனால் இந்தக் கட்டிடம் எங்களுடையது, அதனால் நீங்கள் நூலகத்தை மாற்றி வேறு இடத்தில் வெத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தத் துறை அலுவலர்கள் சொல்கிறார்கள். புதிய கட்டிடம் கட்டித்தர ஊரக வளர்ச்சித்துறைக்கு கோரிக்கை வைத்தபோது இந்த நூலகம் இங்கிருந்து மாற்றப்படாது என்ற வாக்குறுதியை அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்திருந்தார். அதன் பிறகும் இது எங்கள் கட்டிடம் , எங்களுக்குத் தேவைப் படுகிறது என மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடர்பான அலுவலர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

நூலகத்திற்கென தனிக் கட்டிடம் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கும். ஆகையினால் நூலகத்திற்கான சொந்தக் கட்டிடம் கட்ட ஏதுவான பொது இடத்தைக் காண்பித்துக் கொடுக்குமாறு வருவாய்த் துறைக்கு அளிக்கப்பட்ட மனுவின் பேரில் 3 சென்டு இடத்தை கிராம நிர்வாக அலுவலர் காண்பித்தார். இந்த இடமானது ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் பல முறை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றிப்பட்டுள்ளது. இந்த இடத்தையோ அல்லது தகுதியான மாற்று இடத்தையோ நூலகத்திற்கு விரைந்து வழங்கி சொந்தக் கட்டிடம் கட்டித்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.