பெரம்பலூர், செப். 8: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக பெரம்பலூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10,11 என வியாழன் வெள்ளிக் கிழமைகளில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ரேணுகோபால் தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கணேசன் வரவேற்கிறார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் லதா, சதாசிவம், வேலு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவில் உடற்கல்வி இயக்குனர் விஜயன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தத்தி தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தடகள விளையாட்டுப் போட்டியில் ஏற்கனவே வட்டாரங்கள் அளவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்பார்கள். பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


