Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா

அரியலூர்,மே 7: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 28ஆம் தேதி ஐயனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

5ஆம் நாள் படைத் தேர் திருவிழாவும். 7ஆம் நாள் மாதிரி தேரோட்டமும் நடைபெற்றது. கிராம மக்களால் தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி, காய்கறிகள் ஆகியவைகளை வரும் ஆண்டுகளிலும் விவசாயம் செழிக்க வேண்டும் என்று தோரணமாக தேரில் கட்டி அலங்கரித்தனர். தேர் கட்டும் பணிகள் நிறைவடைந்து, வழக்கமாக 9ஆம் நாள் நடைபெறும் தேர் திருவிழா அஷ்டமி நவமி காரணமாக இந்த ஆண்டு 11ஆம் நாள் காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மனும் மாரியம்மனும் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து காத்தவராயன் தேரோடும் வீதிகளில் வெள்ளோட்டம் சென்று வீதிகளை ஆய்வு செய்து விட்டு கோவிலுக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து கிடா பலி கொடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

செண்டை மேளம் முழங்க தேரில் அசைந்தாடி தேரோடும் வீதிகள் வழியாக சென்ற அம்மன் வீட்டுக்கு வீடு நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலையில் தொடங்கிய தேரோட்டம் மாலையில் சன்னதியை அடைந்தது. அதன் பின்னர் 100க்கணக்கான ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தனர். பெண்கள் நடை கும்பிடு போட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அரியலூர் மாவட்டத்திலேயே கூலி ஆட்கள் இல்லாமல் உள்ளூர் மக்களே தேர் கட்டும் பணிகள் மற்றும் தேரை ஓட்டும் பணிகள் உட்பட அனைத்து பணிகளையும் தன்னார்வத்துடன் செய்து தேர் திருவிழாவை நடத்துவதோடு தேரில் வரும் அம்மனை தங்களது வீட்டு வாசலிலேயே நிறுத்தி வழிபடுவது இந்த ஊர் தேர் திருவிழாவின் தனிச்சிறப்பு ஆகும்.அதேபோல் இந்த கோவிலுக்கு திருவிழா தொடங்கிய உடன் இந்த பகுதியில் கோடை மழையும் தொடங்கும்.

இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மன் அருளை பெற்றனர். தேர் திருவிழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்