Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

99 வருடங்களாக சாகுபடி செய்து வந்த நிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற வற்புறுத்தும் அதிகாரிகள்

ஜெயங்கொண்டம், ஆக. 3: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நிலம் இழக்கும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் தனவேல், மாவட்ட துணைத் தலைவர் வரப்பிரசாதம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு நிலம் இழந்த விவசாயிகளுக்குபல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர். கூட்டத்தில் பி.பத்மாவதி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மகிமைபுரம் பகுதியில் உள்ள நாட்டான் தரிசு நிலங்கள் என்று சொல்லப்படும் நிலங்களை சிஎஸ்ஐ கிறிஸ்துவ நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. இதில் ஒரு பகுதியில் சிஎஸ்ஐ நிறுவனம் தனது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. மற்றொரு பகுதியில் பழங்குடி இருளர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீதி நிலங்களில் கீழக்குடியிருப்பு, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம், மலங்கன்குடியிருப்பு, விழப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என சிஎஸ்ஐ நிறுவனத்தில் இருந்து உள்குத்தகைக்கு பயிர் செய்து வந்தனர்.

இந்நிலையில் 99 ஆண்டுகள் சிஎஸ்ஐ நிறுவனம் குத்தகை முடிவுற்றதால் நிலங்கள் அரசுக்கு சொந்தமானது என அரசு அறிவித்தது. இதனால் குத்தகை பயிர் செய்த ஏழை விவசாயிகள் நிலங்களில் முந்திரி, தேக்கு, சவுக்கு, ஆர் எஸ் பதி மரம் என வளர்த்து வந்த விவசாயிகள் மரங்களை வெட்டக்கூடாது என அரசு அதிகாரிகள் கூறி வருவதோடு நிலத்திலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என கூறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் காடுகளாக கிடந்த நிலங்களை, தங்களது முன்னோர்கள் வெட்டி நிலத்தை சரி செய்து சீரமைத்து பண்படுத்தி மூன்று தலைமுறைகளாக பயிர் செய்து வரும் விவசாயிகளை திடீரென வெளியேறச் சொல்வதா என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 3 தலைமுறையாக அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா கேட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று வட்டாட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து உள்ளனர்.

மேலும் நிலங்களை பராமரித்து வந்த விவசாயிகளிடமே மீண்டும் நிலங்களை ஒப்படைக்க வேண்டும். அவரவர் பெயர்களுக்கே பட்டா வழங்க வேண்டும். அவ்வாறு நிலங்களை ஒப்படைக்காத பட்சத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நிலம் இழக்கும் விவசாயிகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக கலியமூர்த்தியும், செயலாளராக கந்தசாமியும், பொருளாளராக செல்வமும், துணைத் தலைவர்களாக முருகன் மற்றும் தேன்மொழியும் அவர்களோடு சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் ஜெயராமனும் என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் செல்வம் நன்றி தெரிவித்தார்.