கோவில்பட்டி,ஜன.19: நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாக்கியவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (50). விவசாயியான இவர் தனது காரில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி பறந்து அப்பகுதியில் மதன் என்பவரது வீட்டின் முன்பிருந்த வேப்பமரத்தில் இடித்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பாலசந்திரன் காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் வீட்டின் முன் மரம் இருந்த காரணத்தால் அதில் மோதி கார் நின்றது. இல்லையெனில் கார் வீட்டிற்குள் புகுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


