குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை யானை உலா
குன்னூர், டிச.4: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருபுறங்களிலும் வனப்பகுதி நிறைந்து உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வனங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் மூங்கில்கள் மற்றும் கோரைப்புற்களை உட்கொள்ள இங்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று குன்னூர் மரப்பாலம் அருகே ஈச்சமரம் பகுதியில் ஒற்றை தந்தத்துடன் யானை ஒன்று முகாமிட்டது.
இதனால் அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் யானை அருகே சென்று புகைப்படம், செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் பெரும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை தனிக்குழு ஒன்றை அமைத்து கண்காணித்து காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.