திருவம்பாடி அருகே கேரள அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 2 மூதாட்டிகள் பலி
பாலக்காடு, அக். 10: கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி அருகே கேரள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நேற்று முன்தினம் ஆற்றில் கவிழ்ந்ததில் 2 மூதாட்டிகள் பலியாயினர். மேலும் 35 பயணிகள் காயமடைந்தனர். கோழிக்கோடு திருவம்பாடி பஸ் நிலைய அரசு பஸ் முத்தப்பன் புழாவில் இருந்து முக்கத்திற்கு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. காளியாப்புழா ஆத்துப்பாலம் இறக்கத்தில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆத்துப்பாலத்தின் கைப்பிடிகளை இடித்து உடைத்து விட்டு 20 அடி பள்ளத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ஆனக்காம்பொயிலை சேர்ந்த த்ரேஷியாம்மா (75), கண்டண் சாலை சேர்ந்த கமலா (61) ஆகிய 2 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் பஸ் டிரைவர் ஷிபு (49), நடத்துனர் ரஜீஷ் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், ஊர் மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இணைந்து காயமடைந்த 35 பயணிகளை மீட்டு அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.