கூடுவாஞ்சேரி, செப்.29: கூடுவாஞ்சேரியில், பிரபல தனியார் கடையில், நகை வாங்குவதுபோல் நடித்து, மோதிரத்தை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, மேடவாக்கம் அடுத்த குமரன் கண்டியையை சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவர், கடந்த 9ம் தேதி, கூடுவாஞ்சேரியில் உள்ள பிரபல தனியார் நகை கடைக்கு வந்து, அங்கு, வளையல் வாங்குவதுபோல் பாசாங்கு செய்துள்ளார். கடை ஊழியர் பல டிசைன்களை காட்டியும், இறுதியில் எதுவும் பிடிக்கவில்லை என கூறிய ஹேமமாலினி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இரவு கடையை மூடிய ஊழியர்கள், இருப்பு நகைகளை சரிபார்த்தபோது 6 கிராம் எடையுள்ள மோதிரம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த மோதிரத்தை ஹேமமாலினி லாவகமாக திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடை மேலாளர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமமாலினியை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடையில் திருடிய மோதிரத்துடன், தன் சொந்த ஊரான தேனி சென்ற ஹேமமாலினி, அங்கு 70,000 ரூபாய்க்கு மோதிரத்தை அடகு வைத்து, மீண்டும் சென்னை திரும்பியியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை ஹேமமாலினியை கைது செய்த போலீசார், மாலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர்.


